தனிமை அறிவுரையை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு; தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பியவர்

தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பிய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அதனை மீறியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2020-03-27 22:45 GMT
கொல்லம், 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பின்னரே அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் விலக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர் திருமணத்துக்காக விடுமுறையில் இருந்தார்.

திருமணம் முடிந்ததும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தேனிலவுக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று இருந்தார். கடந்த 19-ந்தேதி அவர் கேரளா திரும்பினார். அப்போது அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. ஆனாலும் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி கலெக்டர் அப்துல் நாசர் கேட்டுக்கொண்டார்.

மிஸ்ராவின் பாதுகாவலர், உதவியாளர் போன்ற ஊழியர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அனுபம் மிஸ்ரா வீட்டுக்கு வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லாதது தெரிந்தது. அவர்கள் இதுபற்றி கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கலெக்டர் நாசர் அவருடன் பேசியபோது, தான் பெங்களூருவில் இருப்பதாக கூறியுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது செல்போன் இருக்கும் இடம் பற்றி ஆய்வு செய்தபோது, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருப்பதாக காட்டியது.

ஒரு அரசு அதிகாரி உரிய அனுமதியோ, விடுமுறையோ பெறாமல், யாரிடமும் சொல்லாமல் மாநிலத்தைவிட்டு வெளியில் சென்றது மிகவும் தீவிரமான விஷயம். எனவே அவரது தற்போதைய இருப்பிடம் மற்றும் பெங்களூரு சென்ற விவரங்கள் ஆகியவற்றை ஒப்படைக்கும்படி கலெக்டர் நாசர் உத்தரவிட்டார். மாநில அரசும் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

அனுபம் மிஸ்ரா மீது போலீசார், உத்தரவுகளுக்கு கீழ்படியாதது, ஆபத்தான தொற்றுநோய் பரவுவதில் அஜாக்கிரதையாக செயல்பட்டது போன்ற பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

கேரளா மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டம் கொல்லம்தான் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்