பிரதமர் நிவாரண நிதி; ரெயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு

பிரதமர் நிவாரண நிதிக்கு ரெயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி நிதியுதவி வழங்க உள்ளனர் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

Update: 2020-03-29 16:26 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன.  இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார்.

அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும்.  எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, வளர்ச்சி அடைந்த நாட்டை அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.  அதனால் நீங்கள் இயன்ற பண உதவியை செய்யுங்கள் என அவர் கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்தது.  இதேபோன்று டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்க முன்வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.51 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  இந்தி திரையுலக நடிகர் மற்றும் 2.ஓ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்க முன்வந்து உள்ளார்.  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குகிறார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு இன்றும் அதிக அளவில் நிதியுதவி வழங்க பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.  ரெயில்வே மற்றும் அதனை சார்ந்த நிறுவன ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதிய தொகையை வழங்குவார்கள் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று கூறியுள்ளார்.

இதேபோன்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி தங்களது ஒரு மாத ஊதிய தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர்.

பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதிய தொகையான ரூ.116 கோடிக்கான காசோலையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். அதனை பெற்று கொண்ட அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

ஜே.எஸ்.வி. குரூப் நிறுவனம் ரூ.100 கோடி நிதியுதவி வழங்குகிறது.  சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பள தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.  கோடக் மகிந்திரா வங்கி ரூ.25 கோடியும் மற்றும் அதன் மேலாண் இயக்குனர் உதய் கோடக் தனிப்பட்ட முறையில் ரூ.25 கோடியும் என ரூ.50 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்