ஐதராபாத்: குடும்ப உறுப்பினர்கள் இல்லாமலே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்

கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் உயிரிழந்த 74-வயது முதியவரின் உடல் சுகாதார பணியாளர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2020-03-30 08:17 GMT
ஐதராபாத்,

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த  74 வயது முதியவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  

இதையடுத்து, அவரது  குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, உயிரிழந்த முதியவரின் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.  சுகாதார  பணியாளர்கள் முன்னிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த செவ்வாய்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். எனினும், இறுதி சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, அந்த முதியவர் உயிரிழந்த பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரது உடலில் வேறு சில பிரச்சினைகளும் இருந்தது என்றார். 

மேலும் செய்திகள்