ஏப்ரல் மத்தியில் அவசரநிலை பிரகடனம் என்ற செய்தி போலியானது; இந்திய ராணுவம்

ஏப்ரல் மத்தியில் அவசரநிலை பிரகடனம் என்ற செய்தி போலியானது என இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது.

Update: 2020-03-30 09:21 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 1,100ஐ கடந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா வைரஸ் பற்றிய அச்சமின்றி, எச்சரிக்கை உணர்வுமின்றி மக்கள் ஊரடங்கை மதிக்காமல் பொதுவெளியில் நடந்து கொள்கின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் மத்தியில் அவசரநிலை மீண்டும் அறிவிக்கப்பட கூடும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், சமூக ஊடகங்களில், ஏப்ரலின் மத்தியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்றும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உதவியாக இந்திய ராணுவம், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். படையினர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை.  இதனை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்