கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள்; நலம் பெற்ற பெண் பேட்டி

கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள் என சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற பெண் பேட்டியளித்து உள்ளார்.

Update: 2020-03-30 12:08 GMT
ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் அம்பாவாடி பகுதியை சேர்ந்த 34 வயது பெண் இந்த மாத தொடக்கத்தில் பின்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.  அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டு உள்ளன.

இதனை அடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.  இதில் கடந்த 18ந்தேதி அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.  தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதில் நலம் பெற்ற அந்த பெண் நேற்று வீடு திரும்பினார்.  அவரது காலனியில் வசிக்கும் மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்.  இந்நிலையில் நிருபர்களிடம் இன்று பேசிய அவர், என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், கொரோனாவில் இருந்து தப்ப வீட்டில் இருப்பதற்கு பதிலாக வேறு எந்த வழியும் இல்லை என்றே கூறுவேன்.

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எனது ஆபத்து நிறைந்த முடிவு முற்றிலும் தவறானது என நான் வருத்தமடைகிறேன்.  நீங்கள் வீட்டில் இருக்கும்வரை பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, நான் வெளிநாடு சென்றபொழுது, முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்.  என்95 முககவசம் அணிந்து கொண்டேன்.  சீரான இடைவெளியில், சேனிட்டைசர்களை கொண்டு எனது கைகளை சுத்தம் செய்து கொண்டேன்.  பிறரிடம் இருந்து விலகியிருக்கும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தேன்.

எனினும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.  அதனால், வீட்டிலேயே இருங்கள் என்பதே ஒவ்வொருவருக்கும் நான் கூறும் அறிவுரையாகும்.  ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்