கொரோனா பரவும் ஆபத்து: தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-03-30 22:45 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பிற மாநிலங்களுக்கு சென்று, தங்கி கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்துவந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். டெல்லி போன்ற சில நகரங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கிறார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பன்சால் என்ற இரு வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அப்படி செல்லும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனுக்கள் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அச்ச உணர்வு மற்றும் பீதியின் காரணமாக தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து செல்வது கொரோனாவை விட பெரிய பிரச்சினை என்றும், இது தொடர்பாக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், தாங்கள் ஏதாவது உத்தரவை பிறப்பித்து குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறினார்கள்.

அத்துடன், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்