14-ந் தேதிக்கு பிறகு விமான சேவையை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை

வருகிற 14-ந் தேதிக்கு பிறகு, விமான சேவையை அனுமதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Update: 2020-04-05 23:50 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறப்பு விமானங்கள், மீட்புப்பணி விமானங்கள் ஆகியவை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த 21 நாள் ஊரடங்கு, வருகிற 14-ந் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. எனவே, 14-ந் தேதிக்கு பிறகு, விமான சேவை மீண்டும் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

14-ந் தேதிக்கு பிறகு, உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளை மீண்டும் அனுமதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 14-ந் தேதிக்கு பிறகு பயணம் செய்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவை விமான நிறுவனங்கள் மேற்கொள்ளலாம்.

ஆனால், ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அந்த டிக்கெட்டுகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தவிர, இதர விமான நிறுவனங்கள், 14-ந் தேதிக்கு பிறகு உள்நாட்டு சேவைக்கு டிக்கெட் முன்பதிவை அனுமதித்து வருகின்றன. ஏர் இந்தியா, 30-ந் தேதிக்கு பிறகு பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவை அனுமதித்துள்ளது.

மேலும், விமான சேவை ரத்து காரணமாக, விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமானிகளை தவிர, இதர ஊழியர்களுக்கு இதர படிகளை ஏர் இந்தியா 10 சதவீதம் குறைத்துள்ளது.

ஒரு தனியார் விமான நிறுவனம், தனது விமான சேவையை காலவரையின்றி ரத்து செய்துள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் இல்லா விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் சில தனியார் விமான நிறுவனங்கள், சம்பள குறைப்பு, ஊழியர் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

மேலும் செய்திகள்