ஊரடங்கை நீட்டித்தால் ‘பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும்’ - மாயாவதி சொல்கிறார்

21 நாள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று மாயாவதி கூறியுள்ளார்.

Update: 2020-04-11 19:32 GMT
லக்னோ, 

கொரோனா வைரஸ் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, நாளை மறுதினம் 14-ந் தேதி முடிகிறது. இதை நீட்டிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று அதன் தலைவர் மாயாவதி நேற்று தெரிவித்தார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

தீவிர பரிசீலனைக்கு பின்னர் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால் அதை எங்கள் கட்சி வரவேற்கும். தேசிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் ஜாதி, மத, அரசியலுக்கு அப்பால் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். எந்த முடிவை எடுத்தாலும், அதில் ஏழை எளியோர், நலிவடைந்த பிரிவினர், தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிராக மறைமுகமாக போராடி வருகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், போலீசார் ஆகியோரையும், அவர்களின் குடும்பங்களையும் காக்க அரசு விரைவாக செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்