சரக்கு ரெயில், லாரி, படகில் 3 நாட்களாக துணிகர பயணம் - தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 1,100 கி.மீ. சென்ற போலீஸ்காரர்

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, ஒரு போலீஸ்காரர் சரக்கு ரெயில், லாரி, படகு ஆகியவற்றில் மாறி மாறி 1,100 கி.மீ. பயணம் செய்து சொந்த கிராமத்துக்கு சென்றார்.

Update: 2020-04-13 00:13 GMT
ராய்ப்பூர், 

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சிகார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ் (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சத்தீஷ்கார் ஆயுதப்படை போலீசில் வேலை கிடைத்தது. அதனால், மனைவி, குழந்தைகளை கிராமத்திலேயே விட்டுவிட்டு, சத்தீஷ்கார் மாநிலத்தில் பிஜப்பூரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் முகாமில் பணியாற்றி வருகிறார். நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, சந்தோஷ் யாதவை அவருடைய தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். யாதவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தார். அவரை வாரணாசியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு சந்தோஷ் யாதவ் கூறினார்.

அதன்படி, மறுநாள் வாரணாசி ஆஸ்பத்திரியில் யாதவின் தாயார் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று மாலையே தாயார் இறந்து விட்டதாக யாதவுக்கு தகவல் கிடைத்தது. தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மேல் அதிகாரியிடம் சந்தோஷ் யாதவ் விடுமுறை கேட்டார். விடுமுறை கிடைத்தவுடன், 7-ந் தேதி காலையில் ஊருக்கு புறப்பட்டார்.

ஊரடங்கையொட்டி, போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த போதிலும், எப்படியாவது ஊருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதனால், சரக்கு ரெயில், லாரி, படகு என கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணம் செய்து 3 நாட்கள் கழித்து 10-ந் தேதி சொந்த ஊரை அடைந்தார்.

பயணம் செய்தது எப்படி என்பது குறித்து சந்தோஷ் யாதவ் கூறியதாவது:-

பிஜப்பூரில் இருந்து புறப்பட்டவுடன், முதலில் தலைநகர் ராய்ப்பூருக்கு சென்று விட்டால், எப்படியாவது வாகனங்கள் கிடைக்கும் என்று கருதினேன். முதலில், நெல்மூட்டை லாரியில் ஏறி, ஜகதால்பூர் சென்றடைந்தேன். அங்கு 2 மணி நேரம் காத்திருந்த பிறகு, மினி லாரி தென்பட்டது. அதில் ஏறி, கொண்டேகான் என்ற இடத்தை அடைந்தேன்.

அங்கு போலீசார் என்னை நிறுத்தினர். அவர்களிடம் என் நிலைமையை சொன்னேன். அங்கிருந்த ஒரு அதிகாரி, எனக்கு அறிமுகமானவர் என்பதால், ஒரு மருந்துப்பொருள் ஏற்றிச்சென்ற வாகனத்தில் என்னை ராய்ப்பூருக்கு அனுப்பி வைத்தார்.

ராய்ப்பூரில், எனக்கு தெரிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உதவியால், சரக்கு ரெயிலில் பயணித்தேன். 8 சரக்கு ரெயில்களில் மாறிமாறி பயணித்து, என் கிராமம் அருகே உள்ள சுனாரில் இறங்கினேன்.

அங்கிருந்து 5 கி.மீ. நடந்து சென்று கங்கை ஆற்றை அடைந்தேன். அங்கு படகில் பயணம் செய்து எனது கிராமத்துக்கு போய்ச் சேர்ந்தேன். 3 நாட்களாக 1,100 கி.மீ. பயணித்து, 10-ந் தேதி காலையில்தான் ஊரை அடைந்தேன்.

என் கிராமத்தை சேர்ந்த 78 பேர் ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். நான் பட்ட கஷ்டம், நக்சலைட்டுகளுடனான சண்டைக்கு சற்றும் சளைத்தது அல்ல. இருப்பினும், மக்களின் பாதுகாப்புக்கு ஊரடங்கு அவசியமானதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்