ஊரடங்கு விலக்கு; பிரதமர் மோடி தலைமையில் முதல் மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது

பிரதமர் மோடி தலைமையில் ஊரடங்கு விலக்கு பற்றி முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ளது.

Update: 2020-04-27 04:51 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மார்ச் 20ந்தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து 24ந்தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஏப்ரல் 14ந்தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அவர் 3 முறை முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசித்து இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த 11ந்தேதி முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து 14ந்தேதி, ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

கிராமப்புறங்களில் வணிக வளாகங்கள் அல்லாத பிற கடைகளை திறக்க கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடைகளை திறக்க தடை விதித்து இருக்கிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கின் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் வேகம் குறைந்துள்ள போதிலும், அது பரவுவதை முற்றிலுமாக தடுத்துநிறுத்த முடியவில்லை.  இந்த நிலையில், ஊரடங்கு விலக்கு பற்றி காணொலி காட்சி வழியாக முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டுள்ளார்.  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசு உயரதிகாரிகள் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளிவர கூடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்