ஊரடங்கு நெறிமுறைகளை செயல்படுத்துவதை உறுதி செய்யுங்கள் - மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கு நெறிமுறைகளை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-05-21 22:20 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4-வது கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் மக்களின் பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவுறுத்தி உள்ளன. அதே சமயம் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வீதிகளில் உலா வருவது தொடர் கதையாகி உள்ளது. 

இந்த நிலையில் ஊரடங்கு நெறிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்யும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், “நாட்டில் பல இடங்களில் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்படுவது உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறினார்.

மேலும் செய்திகள்