ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி

ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.

Update: 2020-05-26 14:16 GMT
புதுடெல்லி, 

ஊரடங்கு தோல்வியடைந்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “ ஊரடங்கு அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன. இதுவே இந்த ஊரடங்கின் வெற்றி. மேலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறிய காங்கிரஸ் கட்சி, தற்போது ஊரடங்கை தளர்த்தும்போது அதையும் எதிர்க்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது. அவர்கள் இதிலும் அரசியல் விளையாட்டைத்தான் மேற்கொள்வார்கள். நாட்டு மக்களுடன் துணை நிற்க வேண்டிய நேரத்தில், மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார். 

45 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல 3,000 ரயில்கள் இயக்கப்பட்டன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. பா.ஜனதா ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. எந்த காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இதுபோன்று நடந்துள்ளது?.

ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்