ஏற்றுமதியாளர்கள் கடன் பெற ரூ.7 ஆயிரம் கோடியில் திட்டம்
ஏற்றுமதியாளர்கள் கடன் பெறுவதை மேம்படுத்துவதற்காக ரூ.7,295 கோடி ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் படூ கூறுகையில், “ஏற்றுமதியாளர்களின் நிதி சிக்கலுக்கு தீர்வு காண ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வட்டி மானிய திட்டத்தின்கீழ், ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய கடன்களுக்கு மானியம் வழங்கப்படும். இதன்கீழ், தகுதியுள்ள சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு 2.75 சதவீத அளவுக்கு மத்திய அரசு மானிய பலன்கள் அளிக்கும்.
வட்டி மானியத்தின் அளவு, உள்நாட்டு, சர்வதேச அளவுகோல்கள் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு செய்யப்படும். ஒரு நிறுவனத்துக்கு ஓராண்டு பலன் ரூ.50 லட்சம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிடும்.
ரூ.2 ஆயிரத்து 114 கோடி பிணைய ஆதரவு திட்டத்தின்படி, ஒரு சிறு, குறு, நடுத்தர நிறுவனத்துக்கு ரூ.10 கோடி வரை பிணை உத்தரவாதம் அளிக்கப்படும். சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு 85 சதவீதம் வரையும், நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு 65 சதவீதம் வரையும் பிணை உத்தரவாதம் அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இதன்படி ஏற்றுமதியாளர்கள் கடன் பெறுவதை மேம்படுத்துவதற்காக ரூ.7 ஆயிரத்து 295 கோடி ஏற்றுமதி ஆதரவு தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், வட்டி மானியத்துக்கு ரூ.5 ஆயிரத்து 181 கோடியும், பிணை ஆதரவாக ரூ.2 ஆயிரத்து 114 கோடியும் செலவிடப்படும். இந்த திட்டம் 6 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.