இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; 90% பேருக்கு அறிகுறி தெரியாது

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அறியாமல் வாழ்வர் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-28 12:34 GMT



பெங்களூர்

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.

தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.

4- வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.அப்போது கொரோனா பாதிப்புகளில்  மிகப்பெரிய ஒரு உயர்வு இருக்கும் என பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்
நரம்பியல் ஆய்வு தலைவர் டாக்டர் ரவி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாட்டில் கொரோனா தொற்றுஅதிகரிப்பு காணவில்லை. மே 31 அன்று ஊரடங்கு முடிவடைந்த பின்னர் ஜூன் முதல் பாதிப்பு அதிகரிக்கும், மேலும் சமூகம் பரவல் அதிகரிக்கும்.

டிசம்பர் இறுதிக்குள், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது கூட அறியாமல் வாழ்வர்.

கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பைக் கையாள மாநிலங்களுக்கு மருத்துவ உள்கட்டமைப்பை முழுமையாக வழங்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் ரவி கூறினார், குறிப்பாக தீவிர மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றின் உச்சத்தை கையாள மாநிலங்களைத் தயார்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு கொரோனா சோதனை ஆய்வகங்களை வைத்திருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகம் புதன்கிழமை 60 ஆய்வகங்களின் இலக்கை எட்டிய முதல் மாநிலமாக ஆனது.  பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா மருத்துவ அறிவியல் கழகத்தில் கொரோனா சோதனை ஆய்வகத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம், அதனுடன் இப்போது 60 ஆய்வகங்கள் உள்ளன, அவை மாநிலத்தின் 30 மாவட்டங்களுக்கு சாதகமாய் இருக்கும்," என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்