சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகளும், 176 குண்டு துளைக்காத கவச வாகனங்களும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-05-31 23:59 GMT
புதுடெல்லி, 

முக்கியமான துணை ராணுவப்படையான மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரிலும், 90 ஆயிரம் வீரர்கள் நக்சல் பாதிப்பு நிறைந்த மாநிலங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி, அந்த வீரர்களுக்கு குண்டு துளைக்காத 42 ஆயிரம் உடைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உடைகள், மிகவும் மேம்பட்ட தரம் கொண்டவை.

தற்போதைய குண்டு துளைக்காத உடையை விட அதிக பரப்பளவு கொண்டது. படையினரின் கழுத்து உள்பட முக்கிய பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும். தற்போதைய உடையை விட எடை குறைவாக இருக்கும்.

இந்த உடைகள், காஷ்மீரிலும், நக்சல் பாதிப்பு மாநிலங்களிலும் படையினருக்கு வழங்கப்படும்.

அதுபோல், 176 கவச வாகனங்கள் வழங்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் 5 அல்லது 6 பேர் பயணிக்கலாம்.

கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகளால் இவற்றை துளைக்க முடியாது.

மேலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 80 மாருதி ஜிப்சி வாகனங்களில் குண்டு துளைக்காத கவச பாதுகாப்பை சி.ஆர்.பி.எப். பொருத்தி உள்ளது.

மேலும் செய்திகள்