சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலை; சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு

சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலையாவார் என்பதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

Update: 2020-06-26 08:24 GMT
பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மூன்று பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை கர்நாடக அரசு விடுதலை செய்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 14-ந் தேதி தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14 ந்தேதி விடுதலையாவார்' என, பா.ஜனதா பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதை, கர்நாடக அரசோ, சிறை நிர்வாகமோ உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகள் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்ற தகவலை மறுத்தனர். அதுபோன்ற எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து சுதந்திர தினத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பின்னர் அந்த முடிவின் அறிக்கை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு கவர்னர் ஒப்பதல் வழங்கிய பிறகே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார்.

மேலும் செய்திகள்