விருப்பம்போல் நடவடிக்கை எடுங்கள், நான் இந்திரா காந்தியின் பேத்தி: உ.பி. அரசுக்கு பிரியங்கா சவால்

நான் இந்திரா காந்தியின் பேத்தி. சில எதிர்க்கட்சி தலைவர்களைப் போல், அறிவிக்கப்படாத பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் அல்ல என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-26 23:06 GMT
புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசாங்க குழந்தைகள் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் பத்திரிகை செய்தி வெளியானது. அதை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சனம் செய்திருந்தார். அதனால் அவருக்கு உத்தரபிரதேச குழந்தை உரிமைகள் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், பிரியங்கா தனது ‘பேஸ்புக்‘ பக்கத்தில் உத்தரபிரதேச அரசுக்கு சவால் விட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

மக்கள் சேவகி என்ற முறையில், உத்தரபிரதேச மக்களுக்கு சேவை செய்வது எனது கடமை. அதற்காக மக்கள் முன்பு உண்மைகளை முன்வைப்பதுதான் என் வேலையே தவிர, அரசின் பிரசாரத்தை முன்வைப்பது அல்ல.

இதற்காக தனது பல்வேறு துறைகள் மூலமாக உ.பி. அரசு என்னை மிரட்டி வருகிறது. உங்கள் விருப்பம்போல் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். நான் உண்மையை தெரிவித்தே வருவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி. சில எதிர்க்கட்சி தலைவர்களைப் போல், அறிவிக்கப்படாத பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்