ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா

எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது.

Update: 2020-06-29 04:52 GMT
 புதுடெல்லி

கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது.

இந்தியா-சீனா  கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.

சீனா - இந்தியா இடையே ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த சூழ்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்பாக தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. 

மவுண்ட் எவரெஸ்ட் ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைக் கழகத்தின் வீரர்கள் உட்பட ஐந்து புதிய வீரர்கள்  பிரிவுகளை ஜூன் 15 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் ஆய்வுக்காக அனுப்பி வைத்ததாக அதிகாரப்பூர்வ இராணுவ செய்தித்தாள் சீனா தேசிய பாதுகாப்பு செய்தி தெரிவித்துள்ளது.

 சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்ட செய்தியில், ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 வீரர்கள் திபெத் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தது.

சர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில், 'என்போ பைட் கிளப்' பங்கேற்று வருகிறது. ‘‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மோதலில் இந்திய வீரர்களுடன் இந்த கிளப் வீரர்கள் சண்டையிட்டார்களா?’’ என்று அதன் தலைவர் என்போவிடம் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பின. இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சீன ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் வாங் ஹாய்ஜியாங் கூறும்போது, ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த வீரர்கள் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் வருகையால் படையின் பலம் அதிகரித்துள்ளது” என்றார்.


மேலும் செய்திகள்