நாடு முழுவதும் நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகங்களை நாளை முதல் திறக்க அனுமதி

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2020-07-05 02:33 GMT
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு  நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை( ஜூலை 6) ஆம் தேதி முதல்  அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.  அதே நேரம் மறு அறிவிப்பு வரும் வரை இ நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிருமி நாசினிகளை சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை விதித்துள்ளது.அதேவேளையில், கொரோனா பாதிப்பு நிலையை பொருத்து மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அனுமதியை அடுத்து நாளை முதல் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், டெல்லி செங்கோட்டை ஆகியவை திறக்கப்பட உள்ளன. முதல் கட்ட ஊரடங்கு தளர்வின் போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 820 மத தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்