தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது - பினராயி விஜயன்

தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-13 14:51 GMT
திருவனந்தபுரம்,

கேரள  முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. என்ஐஏ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். என்ஐஏ திறமை வாய்ந்த விசாரணை அமைப்பு. அவர்கள் தங்கள் விசாரணையைத் தொடரட்டும்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியமானது. இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். முதல்-மந்திரி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாலும், மேற்கொள்ளட்டும். விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியட்டும்.

ஸ்வப்னா சுரேஷிடம் தொடர்பிலிருந்தது தெரியவந்ததையடுத்து, முதன்மைச் செயலர் பொறுப்பிலிருந்து சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார். ஐடி துறையில் அந்தப் பெண் எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அவரை இடைநீக்கம் செய்ய வேறு எந்தக் காரணமும் இல்லை. கற்பனையின் அடிப்படையில் அரசால் நடவடிக்கை எடுக்க இயலாது.

கேரளாவில் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிலர் பொய் பிரச்சாரங்களை பரப்புகின்றனர். மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால், கேரளாவில் போதுமான சோதனைகளை செய்யவில்லை என்று கூறுகின்றனர். டெஸ்ட் பாசிட்டிவ் விகிதம் கேரளாவில் 2.27% ஆகும், மற்ற நாடுகளை விட கேரளா சிறப்பாக செயல்படுகிறது. கேரளாவில் மேலும் 449 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கேரளாவில் இறப்பு விகிதம் 0.39% ஆகும், இது மற்ற மாநிலங்களை விட குறைவு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்