அசாமில் வெள்ள பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-24 12:29 GMT
கவுகாத்தி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது.  சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.  எனினும், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இது தவிர்த்து, 

நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனால், டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிவாரண முகாம்களை தஞ்சமடைந்து உள்ளனர்.

வருகிற 26ந்தேதி முதல் 29ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, பீகார், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வருகிற 26ந்தேதி முதல் 28ந்தேதி வரையிலும், பஞ்சாப் மற்றும்  அரியானாவில் வருகிற 27ந்தேதி முதல் 29ந்தேதி வரையிலும் பரவலான கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த மழைப்பொழிவானது மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அதிகளவில் காணப்படும்.

அசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் அசாமிலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அசாமில் வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.  இதேபோன்று பயிர்கள், சாலைகள் மற்றும் பாலங்களும் நீரால் சூழப்பட்டு உள்ளன.  இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

இதுவரை 28.32 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் 93 பேர் பலியாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து உள்ளது.  மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 400க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோக மையங்கள் 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.  அவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.  இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்படுகின்றன.  காசிரங்கா தேசிய பூங்காவில் 123 விலங்குகள் வெள்ளத்திற்கு பலியாகி உள்ளன.  150 விலங்குகள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.  மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்