இந்தியாவில் கொரோனா தொற்றினால் இறப்போர் விகிதம் 2.28% மட்டுமே - மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா தொற்றினால் இறப்போர் விகிதம் 2.28% மட்டுமே என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-27 11:26 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனின் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இருப்பினும் அதிகமான கொரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து மீட்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,

தீவிர பரிசோதனை மூலமாக, கொரோனா தொற்றினை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குணமடைவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து, தற்போது 2.28 % ஆக உள்ளது. உலகிலேயே இறப்பவர்களின் விகிதம் குறைந்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கடந்த 4 நாட்களாக ஒரு நாளில் குணமடைவோரின் எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,991 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். இதன் விளைவாக இதுவரை இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை (9,17,567) கடந்துள்ளது. குணமடையும் விகிதம் 64 சதவீதமாக உள்ளது.

இறப்பு விகிதம் குறைந்துள்ளதாலும், அதிகம் பேர் குணமடைந்து வருவதாலும், மருத்துவ சிகிச்சை (4,85,114) பெறுபவர்களை விட, 4,32,453 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையை அதிகரித்து இருப்பதாலும், ஆஸ்பத்திரி கட்டமைப்புகளை அரசு மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சிகளால் பெருக்கி இருப்பதாலும், விரைவாக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாலும் இறப்புவீதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. உலகளவில் குறைவான இறப்பு வீதத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்