பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்: மத்திய அரசு தகவல்

பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகளை நியமனம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-07-29 21:56 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறிந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அப்படி கைது செய்யப்பட்டவர்கள் வைத்திருக்கும் நிதி மற்றும் பிற சொத்துகளை தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகளே இதுவரை பறிமுதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

1967 சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்ட பிரிவு 51ஏ யின்படி இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டப் பிரிவின் கீழ் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அல்லது ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் அல்லது பொருளாதார வளங்களை முடக்குதல், பறிமுதல் செய்தல்; சம்பந்தப்பட்ட நபர்கள் இந்தியாவுக்குள் நுழைவது அல்லது இந்தியாவில் இருந்து செல்வதை தடுத்தல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த 44 அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள இந்த 44 அதிகாரிகளும் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், நிதிப் புலனாய்வுப் பிரிவு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்