தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்குடனான உறவு குறித்து நடிகை ரியா பரபரப்பு தகவல்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவருடனான உறவு குறித்து நடிகை ரியா சக்ரபோர்த்தி பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். ரியா சக்ரபோர்த்தி மனு மீது சுப்ரீம் கோர்ட்டு 5-ந் தேதி விசாரிக்கிறது.

Update: 2020-08-02 02:58 GMT
மும்பை,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி, சுஷாந்த் சிங் காதலி ஆவார். அவர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சில நாட்கள் முன்பு வரை அவருடன் பாந்திராவில் ஒரே வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாட்னாவில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என நடிகை ரியா சக்கரபோர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மேலும் அவா் அந்த மனுவில், ஒரு வருடமாக ஜூன் 8-ந் தேதி வரை சுஷாந்த் சிங்குடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்ததாகவும், பின்னர் தற்காலிகமாக அங்கு இருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 5-ந் தேதி நீதிபதி கிரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் நடக்கிறது. இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில் எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இந்த மனுவில் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பை வழங்க கூடாது என கூறியுள்ளார். இதேபோல மராட்டியம், பீகார் மாநில அரசும் கேவியட் மனுக்களை தாக்கல் செய்து உள்ளன.

இதற்கிடையே மும்பை வந்துள்ள பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இதுவரை பீகார் போலீசார் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், உறவினர்களை சந்தித்து உள்ளனர். இதில் அவர்கள் சுஷாந்த் சிங்கின் சகோதரி, முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே, சமையல்காரர், நண்பர், உடன்பணியாற்றியவர்கள் என 6 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர். இதேபோல நடிகரின் வங்கி கணக்கில் நடந்த பணபரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தி உள்ளனர் ” என்றார்.

இதேபோல நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என நேற்று முன்தினம் கவர்னர் பகத்சிங்கோஷ்யாரியை சந்தித்து நடிகர் சேகர் சுமன் கோரிக்கை மனு அளித்து உள்ளார்.

மேலும் செய்திகள்