ராமர் கோவிலுடன் அரசியலை தொடர்புபடுத்தக்கூடாது; ராமஜென்மபூமி அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை தெளிவுபடுத்தி உள்ளது.

Update: 2020-08-02 21:56 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்து வருகிறது.

அந்த அறக்கட்டளையில் பட்டியல் இனத்தை சேர்ந்த காமேஸ்வர் சாவ்பால் என்பவரும் உறுப்பினராக இருக்கிறார். ஆரம்பத்தில், விசுவ இந்து பரிஷத்தில் இருந்த அவர், பின்னர் பா.ஜனதாவில் இணைந்து பீகார் மாநிலத்தில் எம்.பி.யாக இருந்தார்.

ராமர் கோவில் குறித்து காமேஸ்வர் சாவ்பால் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த அடிக்கல் நாட்டு விழா, ராமராஜ்யத்துக்கும் அடிக்கல்லாக அமையும். ராமரின் வாழ்க்கை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. எனவே, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும்.

ராமர் கோவில் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட பா.ஜனதா, அரசியல்ரீதியாக பலனடைந்தது. ஏனென்றால், 4 மாநில அரசுகளை பா.ஜனதா தியாகம் செய்துள்ளது.

பிரதமர் மோடி, ஒரு தேசிய கதாநாயகன். அவர் ராமராஜ்யத்தை நோக்கி நாட்டை வழிநடத்திச் செல்வார். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, ராமஜென்மபூமி இயக் கத்துடன் மக்களை இணைத்த மாபெரும் ஆன்மா.

இருப்பினும், ராமர் கோவிலுடன் அரசியலை தொடர்புபடுத்தக்கூடாது. ஏனென்றால், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்பாகவே, ராமர் கோவிலுக்காக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகாத்மா காந்தி கூட ராமர் பெயரை பயன்படுத்தியே தேசிய அரசியலுக்கு மக்களை திரட்டினார்.

ராமர் கோவில் இயக்கத்தில் சேர வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சியையும் நாங்கள் தடுத்தது இல்லை. இது, கங்கை நீரை போன்றது.

சிலர் கங்கை நீரை சேகரிக்கின்றனர். வேறு சிலர், தங்கள் வீடு அருகே கங்கை நீர் ஓடினாலும் சேகரிப்பது இல்லை. அதுபோல், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்