மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.

Update: 2020-08-10 20:49 GMT
திருவனந்தபுரம்,

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. அதே சமயம் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடைபெறும் பூஜை பக்தர்கள் இன்றி வழக்கம் போல் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் இந்த ஆண்டு சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று பலரும் சந்தேகத்துடன் இருந்து வந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்து உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நவம்பர் 16-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இது தொடர்பாக மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர்கள், பத்தனம்திட்டை மாவட்ட கலெக்டர் நூரு, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனைத்து வழிபாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படும். இணையதளம் வழியாக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்படும். கொரோனாவை முன்னிட்டு சன்னிதானம், பம்பை நிலக்கல் ஆகிய இடங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். சபரிமலை சீசனுக்கு முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்