பெங்களூரு வன்முறை; உ.பி அரசைப் போல இழப்பீடு பெறப்படும்-கர்நாடக மந்திரி தகவல்

உ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம் என்று கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-13 02:37 GMT
பெங்களூரு,

பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அகண்ட சீனிவாசமூர்த்தி. இவரது அக்காள் மகன் நவீன். இவர், நேற்று முன்தினம் மாலையில் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது. அந்த முகநூல் பதிவுக்கு சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

பின்னர் நேற்று முன்தினம் இரவு அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். அவரது வீட்டுக்கும் மர்மநபர்கள் தீவைத்தனர். ஆனால் எம்.எல்.ஏ.வும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் இல்லாததால், அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

கே.ஜி.ஹல்லி மற்றும், டி.ஜே.ஹல்லி ஆகிய பகுதிகளில் வெடித்த வன்முறையில், ஒரு காவல் நிலையமும் தாக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 200 பைக்குகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் வன்முறையில் கட்டிடம் சேதமடைந்தது. கும்பலைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பல காவல்துறையினர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறை திட்டமிடப்பட்டது என்றும், உத்தர பிரதேசத்தில் செய்தது போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துகளுக்கான செலவுகளை அரசு மீட்டெடுக்கும் என  கர்நாடக மந்திரி சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கலவரம் நடந்த பகுதிகளில் வரும் 15 ஆம் தேதி வரை  மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்