இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்‌ஷா இரங்கல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-16 14:07 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகானுக்கு கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.  இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்து இருந்தன.  இதனால் அவருக்கு வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும், சேத்தனின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது என அவருக்கு நெருங்கிய வட்டாரம் நேற்று தெரிவித்திருந்தது.  

இந்த நிலையில், மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானர்.  அவரது மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் வயது 73. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சேத்தன் சவுகான், அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வேறுபடுத்தி கொண்டார். உ.பி.,யில் பா.ஜ.,வை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையாற்றுவதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் மறைவுக்கு உள்துறை மந்திரி அமித்‌ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்துறை மந்திரி அமித்‌ஷா டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அமைச்சரும் உத்தரபிரதேச அரசின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான திரு. சேதன் சவுகான் தனது வாழ்க்கையில் முதன்முதலில் ஒரு விளையாட்டு வீரராகவும் பின்னர் பொது ஊழியராகவும் பணியாற்றினார். அவரது மரணம் இந்திய அரசியலுக்கும் கிரிக்கெட்டுக்கும் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்