மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-08-27 10:01 GMT
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சையது கல்பே ஜாவத் என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மொஹரம்  ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.  உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ பாப்டே கூறும் போது , “  ஒரு குறிப்பிட மத ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தால் குழப்பம் ஏற்படும். கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை சாடுவார்கள்.  நீங்கள் பூரி ஜெகன்நாத் யாத்திரையை மேற்கோள் காட்டுகிறீர்கள். 

பூரி ஜெகன்நாத் கோவில் யாத்திரையானது ஒரு குறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட பாதை வழியாக இருந்தது.  அந்த வழக்கில் அபாயத்தை மதிப்பிட்டு நாங்கள் தீர்ப்பை வழங்கினோம். ஆனால், நீங்கள் ஒட்டு மொத்த நாட்டிற்குமாக பொதுவாக அனுமதி கேட்கிறீர்கள். மக்களின் சுகாதார விஷயத்தில் நாங்கள் துணிந்து முடிவு எடுக்க முடியாது. ஒரு இடத்திற்கு மட்டும் நீங்கள் கோரினால், அங்குள்ள அபாயம் பற்றி நாங்கள் மதிப்பீடு செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.  

மொஹரம் ஊர்வலத்தை லக்னோவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையிட்டப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த முறையீட்டை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் செய்திகள்