மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-28 23:54 GMT
புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 27-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டது.

மேலும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து அந்த குழுவின் முடிவை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க. தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவின் மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை இருவாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்