இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது; ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் மீண்டனர்

இந்தியாவில் மேலும் 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கி உள்ளது.

Update: 2020-09-01 23:45 GMT
புதுடெல்லி,

மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கும் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத எதிரியால், நாடுகளும், அரசுகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சிற்றரசுகள் முதல் வல்லரசுகள் வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கையை பிசைந்தே நிற்கின்றன.

அந்தவகையில் இந்தியாவும் நாள்தோறும் புதிய தொற்றுகளாலும், புதிய மரணங்களாலும் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 70 ஆயிரம் வரையிலான புதிய நோயாளிகள் உருவாகி வருவது மக்களுக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த புதிய தொற்று எண்ணிக்கை நேற்றும் அப்படியே தொடர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா, கடந்த 23-ந்தேதிதான் 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை எட்டியிருந்தது. அடுத்த சில நாட்களில் 37 லட்சத்தை தொடும் நிலையை இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை எட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் மேலும் 819 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு மாண்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 288 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் நீடித்து வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

பலியான 819 பேரில் அதிகட்சமாக மராட்டியத்தில் 184 பேர், கர்நாடகாவில் 113 பேர், தமிழகத்தில் 91 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக ஆந்திரா (85), உத்தரபிரதேசம் (63), மேற்கு வங்காளம் (52), பஞ்சாப் (49), மத்திய பிரதேசம் (20), டெல்லி (18), குஜராத் (14), ராஜஸ்தான் (13), உத்தரகாண்ட் (12), அசாம், ஒடிசா மற்றும் திரிபுராவில் தலா 10 என பிற மாநிலங்களும் உயிரிழப்புகளை கொண்டிருக்கின்றன.

மேலும் கோவா, தெலுங்கானா மற்றும் காஷ்மீரில் தலா 9 பேர், அரியானா, ஜார்கண்ட், கேரளா, புதுச்சேரியில் தலா 7 பேர், பீகார், சண்டிகரில் தலா 4 பேர், இமாசல பிரதேசத்தில் 3 பேர், அந்தமானில் ஒருவர் என கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

மொத்த சாவு எண்ணிக்கையிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் 24,583 மரணங்களுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழகம் (7,322), கர்நாடகா (5,702), டெல்லி (4,444), ஆந்திரா (3,969), உத்தரபிரதேசம் (3,486), மேற்கு வங்காளம் (3,228), குஜராத் (3,020) மற்றும் பஞ்சாப் (1,453) மாநிலங்கள் உள்ளன.

இதற்கிடையே கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 81 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் மொத்தம் 28 லட்சத்து 39 ஆயிரத்து 882 பேர் இதுவரை கொரோனாவை வென்று உள்ளனர்.

தற்போதைய நிலையில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 3.61 மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த 5 நாட்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் விகிதம் 77 சதவீதத்தை எட்டியுள்ளது. இதைப்போல இறப்பு விகிதமும் 1.77 சதவீதமாக குறைந்திருப்பது சுகாதார அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மேலும் 10 லட்சத்து 16 ஆயிரத்து 920 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதன் மூலம் இதுவரை செய்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4.33 கோடியாக அதிகரித்து உள்ளது. இதில் கடந்த 2 வாரங்களில் மட்டுமே 1.22 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

மொத்த பரிசோதனை எண்ணிக்கையில் 34 சதவீத பரிசோதனைகள் தமிழகம், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்