வங்கி கடன் தவணை செலுத்தாத கணக்குகள்: வாராக்கடன் பட்டியலில் சேர்க்க பிறப்பித்த இடைக்கால தடை நீட்டிப்பு

ஆகஸ்டு 31-ந்தேதி வரை வங்கி கடன் தவணை செலுத்தாத கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்க ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து சுப்ரீம்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

Update: 2020-09-11 00:21 GMT
புதுடெல்லி,

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத் தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்யக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஆகஸ்டு 31-ந்தேதி வரை கடன் தொகையை கட்டாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-

வங்கி கடன் தொடர்பாக பல்வேறு துறைகள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இன்னும் இருவாரங்களில் முடிவு எடுக்கப்படும். இது தொடர்பான அனைத்து பிரச்சினைகள் மீது முழுமையான தீர்வை எட்டுவதற்காக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு இதுவரை இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் ஆலோசனை நடத்தி உள்ளது. வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் மத்திய அரசுக்கு மேலும் இரு வாரகால அவகாசம் தேவைப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வங்கிகள் சங்கத்துக்காக ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே வாதாடுகையில், பல்வேறு நிறுவனங்கள் மட்டுமின்றி தனிமனிதர்கள் கடன்களின் மீதான தவணையை திரும்ப செலுத்துவது குறித்தும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், இந்த விதிமுறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் யார் உருவாக்குவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ஹரிஷ் சால்வே பதில் அளிக்கையில், “ரிசர்வ் வங்கி மட்டத்தில் மத்திய நிதி அமைச்சகம் இந்த விதிமுறைகளை உருவாக்கும். மின்உற்பத்தி வினியோக நிறுவனங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். அனைத்து கடன்களையும் வங்கிகள் பொறுப்பில் மட்டுமே விடமுடியாது” என்றார்.

ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் வாதாடிய மூத்த வக்கீல் கபில் சிபல், நிறுவனங்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும், கடன் தவணை கட்டுவதற்காக சலுகை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கடனாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தத்தா வாதாடுகையில், “வங்கிகள் கடன் மீது கூட்டு வட்டியை விதிக்கின்றன. தற்போது வங்கி கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து மறுவரையறை செய்வதால் 95 சதவீத கடனாளிகளுக்கு அது பயன் அளிக்காது.  வங்கிகள் வட்டி வசூலிப்பது தொடர்பான நிலைப்பாடு குறித்து மத்திய அரசு தெளிவாக வரையறுத்து இருக்க வேண்டும். நிறுவனங்களை விட தனி மனிதர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். லட்சக்கணக்கான மக்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலை இழந்து இருக்கிறார்கள்” என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி வாதாடுகையில், தனிநபர்கள் அளவில் உரிய விதிமுறைகளின் கீழ் தற்போது வட்டிக்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த மனுக்களில் குறிப்பிடப்படும் பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடத்த வேண்டியிருப்பதால் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக இரு வாரங்களில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகள் அனைத்தையும் கோர்ட்டின் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும். ஆகஸ்டு 31-ந்தேதி வரை கடன் தொகை கட்டாத கணக்குகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடனாக அறிவிக்க கடந்த 3-ந்தேதி பிறப்பித்த இடைக்கால தடை தொடரும். விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.  இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்