ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்

கேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-14 14:42 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. அது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கேரள உயர்கல்வி மந்திரி கே.டி.ஜலீலிடம், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்றுமுன்தினம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான மந்திரி ஜலீல் பதவி விலக கோரி  கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்தனர்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் மந்திரி ஜலீலை, முதல்-மந்திரி பினராயி விஜயன் காப்பாற்ற முயல்வதாக காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், உயர்கல்வி மந்திரி  ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தன் கடமையை தான் செய்துள்ளார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள்.  கொல்லத்தில், ஒரு கும்பல் நேற்று இரவு கே.டி.ஜலீலின் வாகனத்தை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது. இரண்டு யுவ மோர்ச்சா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வகையான ஆர்ப்பாட்டங்களை அரசு ஏற்றுகொள்ளாது.

மேலும், போலி செய்திகளை பரப்புவதற்கு வேண்டுமென்றே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை உடைக்க  அதன் பின்னால் யார் வேலை செய்பவர்கள் என்று கண்டறிய மாநில அளவிலான போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஜலீல் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெறும் நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்