இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம்: ஜெயா பச்சனுக்கு சிவசேனா ஆதரவு

இந்தி திரையுலகினர் மீதான போதைப்பொருள் புகாருக்கு எதிராக பேசிய ஜெயாபச்சன் கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.

Update: 2020-09-17 01:53 GMT
மும்பை, 

இந்தி திரையுலகம் போதைபொருளுக்கு அடிமையாகி சிக்கி இருப்பதாக இந்தி நடிகை கங்கனா ரணாவத் புகார் கூறி வருகிறார். இந்த நிலையில் பாரதீய ஜனதா எம்.பி.யும், போஜ்புரி நடிகருமான ரவி கிஷான், இந்தி திரையுலகம் போதைபழக்கத்தில் மூழ்கியிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து எம்.பி.யும், நடிகையுமான ஜெயா பச்சன், “போதை பழக்கத்தை பற்றி பேசி சிலர் இந்தி திரையுலகின் நற்பெயரை கெடுக்க முயற்சி செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என மாநிலங்களவையில் பேசினார்.

ஆனால் அவரின் பேச்சுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகை ஜெயாபச்சனின் கருத்தை ஆதரித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:- 

இந்தி திரையுலகம் மீது தேவையற்ற அவதூறுகளை கூறுபவர்கள் நயவஞ்சகர்கள். அவர்களின் அறிக்கை இரட்டை தன்மை உடையது. இந்தி திரையுலகில் உள்ள அனைத்து திரையுலக வல்லுனர்கள் மற்றும் திரை கலைஞர்கள் போதை பொருளுக்கு அடிமை என குற்றம் சாட்டுபவர்களுக்கு முதலில் போதைபொருள் பரிசோதனை நடத்தவேண்டும்.

இந்தி திரையுலகத்திற்கு மராட்டியத்தை சேர்ந்த தாதாசாகேப் பால்கே அடித்தளம் அமைத்தார். ராஜா ஹரிசந்திரா என்ற முதல் மவுன படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய திரையுலகம் லட்சக்கணக்கானவர்களின் உழைப்பால் தற்போது பெரும் உச்சத்தை எட்டியுள்ளது.

நடிகர் சுனில் தத் போன்ற நடிகர்கள் படக்குழுவினருடன் ராணுவ வீரர்களை மகிழ்விப்பதற்காக எல்லைக்கு சென்றனர். மனோஜ் குமார் எப்போதும் தேச பக்தி படங்களை தயாரித்தார். நடிகர் ராஜ் கபூரின் படங்கள் சமூக பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. பல கலைஞர்கள் அவசர நிலைக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர். அதற்காக அவர்கள் பெரிய விலை கொடுக்க நேரிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்