திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள் திடீர் போராட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்காததால் அலிபிரியில் பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-19 19:48 GMT
திருமலை,

திருப்பதியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் இலவச தரிசன பக்தர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து வருகிற 30-ந்தேதி வரை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட், வி.ஐ.பி. புரோட்டோக்கால், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்கள் மட்டும் திருமலைக்கு வர வேண்டும். மற்றவர்கள் யாரும் திருமலைக்கு வர வேண்டாம், எனத் தேவஸ்தானம் அறிவித்தது.

தற்போது கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கி உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வருகின்றனர்.

நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் என்பதால் பக்தர்கள் பலர் திருமலையை நோக்கி பாத யாத்திரையாக வந்தனர். அலிபிரி டோல்கேட் பகுதியில் வந்த இலவச தரிசன பக்தர்களை நேற்று காலை தேவஸ்தான அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆவேசம் அடைந்த பக்தர்கள் அலிபிரி நுழைவு வாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் இல்லாமல் பக்தர்கள் வரக்கூடாது, என வெளியிட்ட தகவல் தங்களுக்கு தெரியாததால் டிக்கெட் இல்லாமல் தரிசனத்துக்கு வந்தோம். எங்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்