தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-09-24 07:25 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறை விதிகளின் படி, சசிகலா விடுதலை தொடர்பான தகவல்கள் வெளிவந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் பதில் அளித்திருந்தது.

இந்த நிலையில், தம்மைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை 3ஆம் நபருக்கு தெரிவிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்த நிலையில், சசிகலாவைப் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்