மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு தினசரி 1,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி

மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு 1,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

Update: 2020-10-06 20:55 GMT
திருவனந்தபுரம்,

கொரோனா காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த பல மாதங்களாக மாத பூஜை நாட்களில் கூட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் தடை உத்தரவுகளை பின்பற்றி பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் நேற்று அறிக்கையினை அரசுக்கு தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை தொடர்பாக, கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி தினசரி 1,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 10 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்யலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் 5 ஆயிரம் பேர் சாமியை தரிசிக்கலாம். எருமேலி மற்றும் புல்மேடு வழியாக பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல இந்த ஆண்டு அனுமதி இல்லை.

கேரள அரசின் கோவிட் - 19 ஜாக்கிரதா ஆன் லைன் போர்ட்டலில் முன்பதிவு செய்து, 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும், அத்தாட்சி சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

முன்னதாக நிலக் கல்லில் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். அந்த பரிசோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டால் அந்த பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்