ஜார்கண்ட் மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.

Update: 2020-10-08 01:18 GMT
ராஞ்சி,

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பெண்களும், சிறுமிகளும் அடங்குவர். இடைத்தரகர்கள் பலர் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக விட்டு செல்வதாக புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்துவர அந்த மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் ஏற்பாடுகளை செய்தார்.

அதன்படி அங்கு உள்ள லதேஹர் மாவட்டத்தில் இருந்து 9 சிறுமிகள் உட்பட 31 பெண்களை ஒரு பஸ்சில் ஏற்றி கொண்டு அவர் தமிழகத்தை நோக்கி புறப்பட்டார்.

வழியில் லதேஹர் மாவட்டத்தின் தாதா கிராமத்தில் போலீசார் அந்த பஸ்சை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த இடைத்தரகரிடம் பெண்களை வேலைக்கு அழைத்து செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடைத்தரகர், பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த 31 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்