மேற்கு வங்காளத்தில் தடையை மீறி பேரணி போலீசாருடன், பா.ஜனதாவினர் மோதியதால் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்றபோது போலீசாருடன், பாரதீய ஜனதா கட்சியினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-08 22:49 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாகவும், குறிப்பாக பாரதீய ஜனதாவினர் கொல்லப்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதை கண்டித்து ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பாரதீய ஜனதாவினர் பேரணியை தடுப்பதற்காக தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகளை போலீசார் பேரிகார்டுகள் வைத்து அடைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ஆனால் தடையை மீறி அறிவித்தபடி நேற்று கொல்கத்தாவின் ஹாஸ்டிங் பகுதியில் இருந்து இருந்தும், ஹவுராவின் சந்ராகச்சி பகுதியில் இருந்தும் பாரதீய ஜனதாவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

போலீசாரின் பேரிகார்டு தடுப்புகளை மீறி முன்னேறி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது. இதனால் பாரதீய ஜனதாவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

போலீசாரை நோக்கி பாரதீய ஜனதா தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். போலீஸ் தடியடியில் பாரதீய ஜனதா தொண்டர்கள் பலர் காயம் அடைந்தனர். இந்த மோதலின் போது ஒரு புறக்காவல் நிலையம் சூறையாடப்பட்டது. போலீசார் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி அம்மாநில தலைமை செயலாளர் அலபான் பந்தோத்யாய் கூறுகையில், பாரதீய ஜனதா பேரணி அனுமதியின்றி நடத்தப்பட்டது. இது தொற்றுநோய் சட்ட விதிகளுக்கு எதிரானது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் 89 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீல நிறத்தில் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, போராட்டக்காரர்களை அடையாளம் காணவே அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினார்.

பாரதீய ஜனதாவினர் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பாரதீய ஜனதா இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவிக்கையில், மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தொண்டர்கள் போலீசாரால் இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்