ஜே.பி.நட்டாவிடம் வாழ்த்து: பா.ஜ.க.வில் சேர்ந்தது ஏன்? நடிகை குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு பா.ஜனதா கட்சியில் நேற்று சேர்ந்தார். பின்னர் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2020-10-13 00:00 GMT
புதுடெல்லி, 

1989-ம் ஆண்டு ‘வருஷம் 16’ படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான நடிகை குஷ்பு 1990களில் ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவினார். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து, கட்சிப்பணி ஆற்றிய அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி, 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

காங்கிரசில் அவருக்கு அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவர் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவரது செயல்பாடு பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருந்தது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து டுவிட்டரில் பதிவிட்டார். அதேபோல உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

இதனால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விடுவார் என்று தகவல் பரவியது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘அந்த தகவல் வதந்தி’ என்று கூறினார். காங்கிரசில், தான் சந்தோஷமாக இருப்பதாக கூறிய அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்ததையும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பது ஆரோக்கியமான அரசியல் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக மீண்டும் தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவர் சுந்தர்சி.யுடன் குஷ்பு டெல்லி வந்தார். அப்போதும் அவர் பா.ஜ.க.வில் சேர்வது குறித்து எதுவும் கூறவில்லை.

இதன்பிறகு டெல்லியில் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை சந்தித்து பா.ஜனதாவில் இணைவது பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று மதியம் அவர்கள் டெல்லியில் உள்ள பா.ஜனதாவின் தேசிய தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பிற்பகல் 2 மணி அளவில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, “நடிகை குஷ்பு பா.ஜனதாவில் இணைகிறார்” என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்வித் பத்ரா முறைப்படி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்புவுக்கு பூங்கொத்து கொடுத்து, பா.ஜனதா கட்சியின் துண்டு அணிவித்து கட்சிக்கு வரவேற்றார். உறுப்பினர் அட்டையும் குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் நடிகை குஷ்பு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது அறையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோரும் பா.ஜனதாவில் தங்களை இணைத்து கொண்டனர்.

அப்போது குஷ்புவின்கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் பா.ஜனதா அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

பா.ஜனதாவில் சேர்ந்தது குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:-

மிகவும் மகிழ்ச்சியுடன் இன்று பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறேன். 10 ஆண்டுகளாக அரசியலில் இருந்ததற்கு அப்புறம், நாட்டு மக்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்பதை உணர்ந்து பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்றால் பிரதமர் மோடி போல ஒரு தலைவர் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நாடு முன்னேற முடியும். அதை உணர்ந்த பின்னர்தான் பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறேன். பா.ஜனதாவில் சேரும் முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டது. ஆனால் இருக்கும் இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்பதால், காங்கிரசில் இருந்து கொண்டு வேறு யாருக்கும் சாதகமாக பேச முடியாத நிலையில் பா.ஜனதாவை விமர்சித்தேன். காங்கிரசில் என்னை ஒடுக்கியவர்களின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யாரை சொல்லி இருக்கிறேன் என்பது கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தெரியும்.

பா.ஜனதாவுக்கு எதிராக மிக கடுமையாக நான் பேசி இருக்கிறேன். ஆனால் போக போகத்தான் நாட்டுக்கு நல்லது எது? என்று புரிந்தது. ஒரு கட்சி (காங்கிரஸ்), தன் தலைமையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த நாட்டை எப்படி காப்பாற்றும்?.

பா.ஜனதாவை எதிர்த்து நான் கடுமையாக பேசி இருந்தாலும், இதுவரை பா.ஜனதா தலைவர்கள் மேல் எந்தவித ஊழலும் இல்லை. மசோதாவில் தவறு இருக்கிறது என்றால் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் தடுத்து இருக்க வேண்டும். தடுப்பதற்கான பெரும்பான்மை காங்கிரசிடம் இல்லை. ஏன் இல்லை?, மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. பா.ஜனதா மீது நம்பிக்கை இருந்ததால் மீண்டும் பா.ஜனதாவை ஜெயிக்க வைத்துள்ளனர். மோடி மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது.

கட்சியில் மாற்றம் இருக்குமே தவிர, எனது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அப்படியேத்தான் இருக்கும். பொதுவாக அரசியல்வாதி என்பதைவிட ஒரு சமூக செயற்பாட்டாளர் என்றே என்னை நான் சொல்வேன். எனவே, நான் வெளிப்படையாக பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்