திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - நாளைமறுநாள் தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும்.

Update: 2020-10-14 09:53 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந் தேதிவரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காகரணமாக கோவில் மாடவீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் வாகன சேவை நடக்கிறது.

இந்த நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் குறித்த ஆலோசனை கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவகர் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் துணை அதிகாரி வசந்த்குமார், கலெக்டர் நாராயண பரத்குமார், டி.ஐ.ஜி. காந்திரானா டாடா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் விழா ஏற்பாடுகள் குறித்து ஜவகர் ரெட்டி கூறுகையில், “கடந்த 1-ந் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாடவீதிகளில் வாகன சேவை நடத்த அனுமதியளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலால் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்பேரில் மாடவீதிகளில் வாகனசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தின்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனம், ஸ்ரீவாரி டிரஸ்ட் பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். தொடர்ந்து லட்டு பிரசாதம், அன்னபிரசாதம் தயாரிக்கும் இடங்களில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்