பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுகிறார்.

Update: 2020-10-22 02:53 GMT
பாட்னா, 

பீகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

பீகாரில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்துள்ளது. 

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதாவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று (வியாழக்கிழமை) வெளியிடுகிறார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜனதா 243 தொகுதிகளில், 121 இடங்களில் போட்டியிடுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பா.ஜனதா 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை நேற்று வெளியிட்டது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராஜ் பப்பர் “மாற்றத்துக்கான ஆவணம் 2020” என்கிற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

அதில் விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும் என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மாநில அளவிலான விவசாய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் உள்ள மக்களுக்கு பீகாரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்