சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை - மெகபூபா முப்தி பேட்டி

சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

Update: 2020-10-23 14:58 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்
 
இவர்களில் பெரும்பாலானோர் ஓராண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து வீட்டுகாவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இது தொடர்பான வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மெகபூபா முப்தி விடுதலை குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருந்து. இந்த நிலையில் 14 மாதங்களாக தடுப்பு காவலில் வைக்கப்ட்டு இருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கடந்த 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

என் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.

எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது.

இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம்.

நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே எனது போராட்டம்.

சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை, என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது.  பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்