போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்பு: கேரள முன்னாள் மந்திரியின் மகன் அதிரடியாக கைது

கேரள மாநில முன்னாள் உள்துறை மந்திரியான கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனான பீனேசை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Update: 2020-10-30 00:02 GMT
பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனிகா, ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன், கேரள மாநில முன்னாள் உள்துறை மந்திரியான கொடியேறி பாலகிருஷ்ணனின் மகனான பீனேசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே கர்நாடக போலீசார், பீனேசிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த போதைப்பொருள் விற்பனையாளர் அனூப்புக்கும், பீனேசுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறையினருக்கு தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பீனேஷ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அனூப்புக்கு ரூ.50 லட்சம் கொடுத்ததற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததால் பீனேசை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 

மேலும் பீனேசிடம் விசாரணை நடத்தவும் கோர்ட்டில் அவகாசம் கேட்டனர். இதையடுத்து, அவரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து, பீனேஷ், 4 நாள் காவலில் எடுக்கப்பட்டார். விசாரணையில் இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்