கள்ளச்சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்பனை - முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் கோரிக்கை

கள்ளச்சந்தையில் வெங்காயமும், உருளைக்கிழங்கும் விற்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-11-02 11:26 GMT
புதுடெல்லி,

வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கடும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன. இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இதையொட்டி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களின் விலைகள், பொய்யாக உயர்த்தப்பட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு உழைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியமான, சாதாரண காய்கறிகளான உருளைக்கிழங்கு, தக்காளி, பயறு போன்றவற்றின் விலை விண்ணைத் தொடுகிறது. அதைத் தடுக்க அரசு எதையும் செய்ய தவறிவிட்டது.

அரசின் தவறான கொள்கைகளால்தான் உருளைக்கிழங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசின் தவறான கொள்கைகளால்தான் தக்காளி கடந்த 10 ஆண்டுகளாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு 147 சதவீத விலை உயர்வுடனும், வெங்காயம் 142 சதவீத விலை உயர்வுடனும் விற்கப்படுகின்றன. இது சாதாரண மக்களின் வாழ்க்கையை கஷ்டத்துக்கு ஆளாக்கி உள்ளது.

இந்த காய்கறிகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சரியான நேரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சேமித்துவைப்பதற்கு தேவையான வசதிவாய்ப்புகள் இருக்கிற போது எதற்காக 125 லட்சம் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? வெங்காய இருப்பு ஏன் பாதுகாக்கப்படவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்