பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி: தீபாவளிக்கு பின்னர் நிதிஷ் குமார் பதவி ஏற்பு - ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தகவல்

பீகாரில் சவால்களை முறியடித்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.

Update: 2020-11-11 23:30 GMT
பாட்னா,

பீகாரில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி முன்னிலை பெற்றது. பின்னர் நிலைமை மாறியது. பா.ஜ.க. கூட்டணியும், மெகா கூட்டணியும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதில் நீண்ட இழுபறி நிலவியது.

முடிவில் 243 இடங்களை கொண்ட சட்டசபையில், பா.ஜ.க. கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. எதிர் அணியான மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்று, மெகா கூட்டணியின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. 74 இடங்களுடன் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த எச்.ஏ.எம்.எஸ். கட்சியும், வி.ஐ.பி. கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் கூட்டணியின் பலம், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களை கடந்து 125 இடங்கள் என்ற நிலைக்கு வந்தது.

சவால்

இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி சவாலாக அமைந்தது. பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக சிராக் பஸ்வான் தனது லோக்ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியது, மேலும் சவாலாக அமைந்தது.

மற்றொரு பக்கம் முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து ஒவைசி தனது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை களம் இறக்கியது இன்னுமொரு சவால்தான். அந்த கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் அரங்கை அதிர வைத்து இருப்பது கவனிக்கத்தக்கது.

நிதிஷ் குமாரின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான அலை இன்னொரு பக்கம் வீசியது. இப்படி கடும் சவால்களையெல்லாம் முறியடித்துதான், பா.ஜ.க. கூட்டணி வென்று, ஆட்சியை தக்க வைத்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக இடங்களை வென்றிருந்தாலும், ஏற்கனவே பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் வாக்குறுதி அளித்தபடி, நிதிஷ் குமார்தான் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார். நிதிஷ் குமாரை பொறுத்தமட்டில் பெரிதான ஊழல் குற்றச்சாட்டு எதுவும் அவருக்கு எதிராக எழுந்தது இல்லை என்பதே பலம்.

நிதிஷ் குமாருக்கு இந்த முறை ஆட்சி நடத்துவது மிக கடினமான ஒன்றாக அமையப்போகிறது. பா.ஜ.க.வை விட குறைவான இடங்களிலேயே அவரது கட்சி வெற்றி பெற்றிருப்பதால் மந்திரிசபையில் பா.ஜ.க.தான் முக்கிய இடம் பிடிக்கும்; தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியை சட்டசபையில் எதிர்கொள்வது நிதிஷ் குமாருக்கு சிம்ம சொப்பனமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நிதிஷ் குமார் பதவி ஏற்பு குறித்து அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி கூறுகையில், “ பீகாரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்” என தெரிவித்தார்.

பா.ஜ.க.கூட்டணியில் அங்கம் வகித்துள்ள எச்.ஏ.எம்.எஸ். கட்சித்தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி கூறுகையில், “நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி என்று பா.ஜ.க. தலைமை ஏற்கனவே கூறி விட்டது” என குறிப்பிட்டார்.

பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலும் இதை உறுதி செய்தார்.

‘மக்களுக்கு வணக்கம்; மோடிக்கு நன்றி’ நிதிஷ் குமார் டுவிட்டரில் பதிவு

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.அதில் அவர், “பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் வழங்கிய பெரும்பான்மைக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். பிரதமர் மோடி அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்