பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு - இந்தியா திட்டவட்ட மறுப்பு

பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள புகாரை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Update: 2020-11-16 00:56 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தான் ராணுவ தளபதி பாபர் இப்திகாருடன் சேர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாகிஸ்தானில் நடந்த சில பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.

அதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் கூறியதை நிராகரிக்கிறோம். இது, இந்தியாவுக்கு எதிரான மற்றொரு பயனற்ற பிரசார நடவடிக்கை. இதற்கு பாகிஸ்தான் காட்டும் ஆதாரங்கள், நம்பகத்தன்மை இல்லாதவை, புனையப்பட்டவை. வெறும் கட்டுக்கதை.

உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், போர்நிறுத்த விதிமீறல், எல்லையில் ஊடுருவல் ஆகியவற்றை நியாயப்படுத்தவும் பாகிஸ்தான் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உலக நாடுகளுக்கு பாகிஸ்தானின் தந்திரம் தெரியும் என்பதால், இது எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்