நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 25 கோடி தொழிலாளர்கள்

நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2020-11-26 01:48 GMT
புதுடெல்லி,

மத்திய வர்த்தக அமைப்புகளின் கூட்டு கூட்டம் கடந்த 16ந்தேதி கூடியது.  இதில், நவம்பர் 26ந்தேதி (இன்று) நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் இந்திய தேசிய வர்த்தக யூனியன் காங்கிரஸ், அகில இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ், இந்திய மத்திய வர்த்தக யூனியன்கள், அகில இந்திய யுனைடெட் வர்த்தக யூனியன் மையம், வர்த்தக யூனியன் ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட 10 வர்த்தக அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை வாபஸ் பெறவேணடும், நிதி துறை உள்ளிட்ட பொது துறைகளை தனியார் மயம் ஆக்குவது நிறுத்தப்பட வேண்டும்.  அரசால் நடத்தப்படும் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த ரெயில்வே, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்றவற்றை கார்ப்பரேட்மயம் ஆக்குவதும் நிறுத்தப்பட வேண்டும்.

அரசு மற்றும் பொது துறை அமைப்புகளின் ஊழியர்களை கட்டாயத்தின்பேரில் முன்பே அவர்களை ஓய்வு பெற சுற்றறிக்கை அனுப்புவது வாபஸ் பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோன்று அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், முன்பு வழங்கப்பட்ட பென்சன் முறையை மேம்படுத்தி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கி பணியாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  அவர்கள், வங்கிகளுக்கான இருப்பு தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும், அதற்கான சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும், போதிய பணியமர்த்தல், வங்கி தனியார் மய எதிர்ப்பு மற்றும் ஒப்பந்த நடைமுறை எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி உள்ளனர்.

அனைத்து இந்திய மின் துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.  பல மாநிலங்களில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக மத்திய வர்த்தக அமைப்புகள் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தனிப்பட்ட மற்றும் மாநில அமைப்புகளுடன் இணைந்து வினியோகித்துள்ளன.

இந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில அமைப்புகளை சேர்ந்த 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்