டெல்லியில் 21-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று (புதன்கிழமை) மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.