பெங்களூரு மாநகராட்சி தேர்தல் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீட்டு மனு விசாரணை

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

Update: 2020-12-17 23:48 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு மாதத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் மாநகராட்சிக்கு உடனடியாக அரசு தேர்தலை நடத்தவில்லை. மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுக்களை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை 4 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் தேதியை 6 வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறி இருந்தது.

அதே நேரத்தில் மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசும் முயன்று வருகிறது. இதற்காக பெங்களூரு மாநகராட்சிக்கு என்று தனியாக புதிய சட்டமசோதாவை சட்டசபையில் அரசு நிறைவேற்றி வார்டு எண்ணிக்கையை 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தி உள்ளது. மேயரின் பதவிக்காலமும் ஒரு ஆண்டில் இருந்து 2½ ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி தேர்தலை அடுத்த ஆண்டு (2021) நடத்தும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் விசாரணை நடைபெற உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது பெங்களூரு மாநகராட்சிக்காக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டமசோதாவை முன்வைத்து அரசு தரப்பில் வாதிடப்படும் என்று மந்திரி அசோக் தெரிவித்துள்ளார். பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் என்.ஆர்.ரமேஷ் கூறுகையில், மாநகராட்சி வார்டுகளை 198-ல் இருந்து 243 ஆக அரசு அதிகரித்துள்ளது. அதன்படியே தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் மாநகராட்சி தேர்தலை நடத்த கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் கவுன்சிலர் சிவராஜ் கூறுகையில், “கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புபடி பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது, பெங்களூரு மாநகராட்சிக்கு புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பது தேர்தலை தள்ளிப்போட அரசு எடுத்த நடவடிக்கைகள் ஆகும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறும் தீர்ப்புக்காக பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும்,“ என்றார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தே மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும் என்பதால், தீர்ப்பை எதிர்பார்த்து முன்னாள் கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் செய்திகள்